எனக்குத் தெரிந்த யானையை
வேறு எவருக்கும் தெரியாது
நீளமான தும்பிக்கையும்
பருத்த கால்களும்
சிறிய கண்களும் இருக்கும்தான்
என் சிறுவயதில் யானை பார்க்க நின்றிருப்போம்
ஆற்று நீரை
தும்பிக்கையாய் உறிஞ்சி குளிக்கையில்
சிதறி தெறிக்கும் நீர்த்துளிகளில்
மனது சிலிர்க்கும்
காடெல்லாம் சுற்றி வந்து
உணவில் பங்கு கேட்டு கூட்டத்தோடு
வீட்டு வாசலில் நிற்கும்
ஆற்றினைக் கடக்க
அதன் மேலேறி பயணித்தும்
யானைச் சாணத்தை மிதித்து
கதகதப் பூட்டிக் கொண்டதுமான
ஒரு சிறுமி
இன்னும் உயிர்ப்புடனிருக்கிறாள்
மனதிற்குள்
காட்டு மரங்களின் ஊடே
கருத்த மேகம்போல ஊர்ந்து செல்லும்
யானை
ஒரு போதும்
பட்டுடையும் நகைகளையும் உடுத்திக் கொண்டு
வருவோர் போவோருக்கு
ஆசி வழங்கும் சமத்து யானைகளுடன்
ஒப்பிடவே முடியாது
காட்டு யானையே
என்னை சுதந்திரப் பெண்ணாய்
உணரச் செய்துகொண்டிருக்கிறது
Poet ,Writer, Orator, Social worker, Entrepreneur, Farmer.
RELATED POSTS
View all